இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தம்

இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கான 19வது திருத்தம் (19th Amendment to the Constitution of Sri Lanka) 2015 ஏப்ரல் 28 அன்று 225-உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 215 வாக்குகளை ஆதரவாகப் பெற்று நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்திற்கு ஒருவர் எதிராக வாக்களித்தார். ஏழு பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். செயரவர்தனா அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற அதிகார அரசுத்தலைவரான பின்னர் இடம்பெற்ற மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசமைப்புத் திருத்தச் சட்டம் இதுவெனக் கணிக்கப்படுகிறது.

அறிமுகம்

2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் வெற்றி பெறும் பட்சத்தில் தனது தேர்தல் பரப்புரையில் அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

மகிந்த ராசபக்ச அரசுத்தலைவராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தின் மூலம் அரசுத்தலைவருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கும் சட்டங்கள் இதன் மூலம் திரும்பப் பெறப்படுவதன் மூலம் நாட்டில் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவதே இத்திருத்தச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். 18வது திருத்தம் மூலம் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அரசுத்தலைவராக வர முடியாது என்ற வரையறையை மகிந்த ராசபக்ச நீக்கியிருந்தார். அத்தோடு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களை அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாற்றினார்.

19வது திருத்தம், 17வது திருத்தத்தின் பெரும்பான்மையான சட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் அரசமைப்பு சபை சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும். இவற்றில் சில:

  1. தேர்தல் ஆணைக்குழு
  2. பொதுச் சேவைகள் ஆணைக்குழு
  3. தேசிய காவல்துறை ஆணைக்குழு
  4. கணக்காய்வு சேவை ஆணைக்குழு
  5. மனித உரிமைகள் ஆணைக்குழு
  6. எல்லை நிர்ணய ஆணைக்குழு
  7. லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
  8. நிதி ஆணைக்குழு
  9. அரச கரும மொழிகள் ஆணைக்குழு

19 ஆம் திருத்தத்தின் விசேடம் என்ன?


ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)

ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். (முன்னர் முடியாது)

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை.
(முன்னர் விரும்பிய அமைச்சுக்களை வைத்திருக்கலாம்)

இரட்டைப் பிரஜையொருவர் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)

ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கும் ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது.
(முன்னர் பதவி நீக்கலாம்)

ஜனாதிபதி பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம்.
(முன்னர் ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கலாம்)

ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குள் கலைக்க 2/3 ஆதரவு வேண்டும்.
(முன்னர் ஒரு ஆண்டுக்குள் கலைக்க 1/2 போதும்)

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு 2 வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.
(முன்னர் ஒரு வாரத்துக்கு முன்பு)

ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் வேண்டும்.
(முன்னர் பிரதமரின் ஆலோசனை கட்டாயமில்லை)

அரச தாபனங்களிலிருந்து தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு.
(முன்னர் இவ்வேற்பாடு இல்லை)

ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
(முன்னர் 6 ஆண்டுகள்)

ஜனாதிபதித் தேர்தலில் 35 வயதை அடைந்தோரே போட்டியிடலாம்.
(முன்னர் 30 வயது)

அமைச்சரவை அமைச்சர்கள் 30 வரையும் ஏனைய அமைச்சர்கள் 40 வரையும் இருக்கலாம்.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடனேயே ஜனாதிபதி உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம்.
உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன்
(முன்னர் விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)

அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசிலேயே ஜனாதிபதி உயர் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம்.
தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு
(முன்னர் ஜனாதிபதி விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)