பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்வி உளவியல் சார் கற்கைகளை மேற்கொள்பவர்களாயின் தொடர்ந்து வாசித்து பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள்.இல்லையேல் இப்பதிவை கடந்து செல்லுங்கள்.
(நேரம் பொன்னானது என்பதற்காக))

மொழி விருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அது தொடர்பான அடிப்படை அறிவு இன்றியமையாதது ஆகும். பெற்றோர், ஆசிரியருடைய மொழி விருத்தி பிள்ளையின் மொழி விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணி என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வீட்டில் பெற்றோரினது குறிப்பாக தாயினது மொழி கையாளுகையினல் பிள்ளையின் மொழி வடிவமைக்கப்படுகின்றது எனலாம். பிள்ளையோடு நெருங்கிப் பழகுபவர்கள் பயன்படுத்தும் சொற்களையே பிள்ளைகள் அதிகம் பயன்படுத்தும் அந்த சூழ்நிலையில் இருந்து முன் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் மொழியை படிப்படியாக விருத்தி செய்யும் பாரிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உள்ளது.

அடிப்படை மொழித்திறன்கள் நான்கு உள்ளன அவை கேட்டல், பேச்சு,வாசிப்பு, எழுத்து என்பனவாகும். கேட்டல் பேச்சு ஆகிய இரண்டும் ஒலி வடிவத்தோடு தொடர்புடையன வாசிப்பு எழுத்து ஆகிய இரண்டும் வரிவடிவத்தோடு தொடர்புடையது. கேட்டல், வாசிப்பு ஆகிய இரண்டு திறன்களின் ஊடாகவும் கருத்துக்களை உள்வாங்கும் பிள்ளைகள் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு செயற்பாடுகளின் ஊடாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றன.இந்த வகையில் பிள்ளையின் மொழி விருத்தி என்பது பல விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மொழிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மேல்வரும் நான்கு திறன்களிலும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பேச்சுசார்ந்த செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉பிள்ளையின் இயல்பான உணர்வுகளை பேச்சின் மூலம் வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளித்தல்.

👉தன்னைப் பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிடுதல்.

👉தனது அனுபவங்களை சொல்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

👉படங்களைப் பார்த்து விபரிப்பது அதற்கான கதை கூறுவதற்கான செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉சிறுவர் பாடல்களை பாடுவதற்கான செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉நொடிகள் விடுகதைகள் போன்றவற்றைப் பிள்ளைகள் தம்மிடைய கேட்டு விடை அளிப்பதற்கான செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉பிள்ளைகளுக்குப் பிடித்த நபர்களை பற்றி கூறுவதற்கு திட்டமிடுதல்.

👉கூறியவற்றை கேட்டு அப்படியே கூறுவதற்கான செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉ஒத்த ஓசையுடைய சொற்களைப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களில் திட்டமிடுதல்.

👉ஒலி பேதமுடைய சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்குரிய செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉ஆரம்பத்தில் சிறிய சிறிய சொற்களை பேசுவதற்கும் படிப்படியாக பெரிய சொற்களை பேசுவதற்கும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

வாசிப்பு செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉எழுத்துக்களின் அமைப்பு வாசிப்பதற்கான திசை என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளுதல் அவசியமாகும்.

👉கண்களை இடமிருந்து வலமாக மேலிருந்து கீழாக நகர்த்தி வாசிப்பதற்கான பயிற்சியை வழங்க கூடியதான செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉வாசிப்பதற்கான ஆரம்ப முயற்சியாக மூன்று சொற்களில் அல்லது நான்கு சொற்களில் ஒரு சொல்லை வித்தியாசமாக கொடுத்து அதனை இனங்கண்டு கொள்வதற்கான ஏற்பாடுகளை திட்டமிடுதல்.

👉ஆரம்பத்தில் படங்களோடு கூடிய சொற்களை வாசிப்பதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளல்.

👉பிள்ளைக்குப் பரீட்சயமான விடயங்களை அதிகம் வாசிப்பதற்கு திட்டமிட்டு கொள்ளல்.

👉முன் பள்ளிப் பருவத்தில் சிறிய சொற்களை வாசிப்பதற்கான செயற்பாடுகளை திட்டமிடுதல் போதுமானது.

👉சொல்லட்டைகள் போன்ற கற்றல் துணைகளை முன்னரே தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

👉பிள்ளை வாசிப்பதற்கான சொற்களை வழங்குகின்ற போது அதில் உள்ள எழுத்துக்கள் சரியான வடிவத்தை கொண்டு இருப்பது அவசியமானது.

👉படிப்படியாக புதிய சொற்களை வாசிக்க பழகுவதற்கான செயற்பாடுகளை திட்டமிடல்.

👉பெரிய எழுத்தில் எழுதப்பட்ட படங்களோடு கூடிய செயல் அட்டைகளை வகுப்பறையில் காட்சிப்படுத்துதல்.

👉படங்களையும் சொற்களையும் தனித்தனியே கொடுத்து அவற்றைப் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளல்.

👉சொற்களை வாசிப்பதற்கு பழகிக்கொண்ட பிள்ளைகளுக்குரிய வாக்கியங்களை இரண்டு அல்லது மூன்று புதிய சொற்களைக் கொண்ட வாக்கியங்களை வாசிப்பதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

👉முன் பள்ளிப்பருவத்தில் உரத்து வாசிப்பதற்கான செயற்பாடுகளை அதிகம் அமைத்துக் கொள்ளல்.

எழுத்துச் செயற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளல்.

👉முன்பள்ளி பருவ பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் தசைநார்களுக்கான பயிற்சிகளை வழங்கும் எழுத்து செயற்பாடுகளை திட்டமிடுதல்.

👉முன்பள்ளி வகுப்பறைகளில் மணல் மூலையை ஏற்படுத்தி பிள்ளைகள் மணலில் எழுதுவதற்கான செயற்பாடுகளைத் திட்டமிடுதல்.

👉பிள்ளை ஆரம்பத்தில் எழுத பழகும்போது பென்சிலை பிடிக்கும் முறை பயிற்சி புத்தகத்தை வைக்கும் முறை ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டுதல்.

👉பொதுவாக ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை எழுதுவதற்கு தேவையான வடிவங்களை கீறப் பழக்குதல்.

👉ஆரம்பத்தில் பிள்ளை கோட்டின் வழியே எழுதுவதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளல்.

👉எழுத்துக்களின் அமைப்பு, திசை, முகம், இடைவெளி என உறுப்பெழுத்துக்கான அடிப்படை அம்சங்களை கவனத்தில் கொள்ளக்கூடிய செயற்பாடுகளைத் திட்டமிடல்.

கேட்டல் திறனை விருத்தியடையச் செய்தல்.

👉கரண்டி தகர பேணிகள் சிரட்டை போன்றவற்றை தட்டி ஒலி எழுப்பி அவற்றை பிள்ளை பிரித்து அறிய சந்தர்ப்பங்களை வழங்குதல்.

👉பூங்கா வயல்வெளி தோட்டம் போன்ற இடங்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று பல்வேறு விலங்குகள் பறவைகள் இயல்பாக ஒலி எழுப்பும் போது அவற்றை கேட்கத் திட்டமிடல்.

👉போக்குவரத்து நடைபெறுகின்ற இடத்திற்கு அண்மையில் அழைத்துச்சென்று வெவ்வேறு வாகனங்கள் செல்லும்போது எழும் சத்தங்களை பிரித்தறிய வாய்ப்பளித்தல்.

👉பாத்திரங்களில் வெவ்வேறுஅளவுள்ள தண்ணீரை ஊற்றி அவற்றில் தட்டி ஒலியெழுப்பி அவதானிக்க செய்து அவற்றைப் பின்னர் சரியான திட்டமிடுதல்

👉அமைதியான சூழலில் குறைந்த சத்தம் உடைய ஒலிகளைக் அறிவதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிடல்.

👉வெவ்வேறு பொருட்களை நிலத்தில் போட்டு ஒலியெழுப்பி விழுந்த பொருள் எது என இனங்காணச் செய்தல்.

👉வெவ்வேறு பிள்ளைகளை மறைவிடத்தில் நின்று கதைக்க வைத்து அவர்களின் குரலைச் சரியாகப் பிரித்தறியத் திட்டமிடல்.

👉பல இரைச்சல் குழப்பம் பல்வேறு ஒலிகள் கேட்கின்ற சூழலை குறிப்பிட்ட ஒரு ஒலியை கேட்பதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிடுதல்.

👉இவ்வாறு செயற்பாடுகளை திட்டமிட்டு செல்லும்போது பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி கவனத்தில் கொள்வது முக்கியமான விடயமாகும்.

மேற்படி செயற்பாடுகளை துறைசார்ந்தோர் மேற்கொள்வதன் ஊடாக உங்களிடமுள்ள குழந்தைகளை மொழிவிருத்தியுள்ள குழந்தைகளாக வளர்த்தெடுக்க முடியும்.


Aathy
Mu/vidyananda college.