ஆய்வானது அறிவின் முன்னரங்க விளிம்பை மேலும் முன்னோக்கி நகர்த்தும். அறிவுத் தேட்டத்திற்கு அது மேலும் அடிப்படைப் பங்களிப்பைச் செய்யும். ஆய்வின் நோக்கங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

  1. அறியாப் பொருளை அறியத் துணிதல்.
  2. மறைந்துள்ள நேர்வியங்களையும் (FACTS) உண்மைகளையும் (TRUTHS) கண்டறிய முயல்தல்.
  3. பிரச்சினைகளும் தீர்வுகளும் சார்ந்த புதிய புலக்காட்சியை (PERCEPTION) ஏற்படுத்தல்.
  4. புதிய விபரிப்புக்களை முன்மொழிதல்.
  5. தொடர்புகளையும், அல்தொடர்புகளையும் வேறு பிரித்து அறிதல்.
  6. மாறிகளுக்கிடையே (VARIABLE) இணங்களையும் அல் இணக்கங்களையும் காணுதல்.
  7. எண்ணக்கோள்களைப் பரீட்சித்தல்.
  8. புலமைப் பயிற்சிச் (ACADEMIC EXERCISE) சுவை காணுதல்.
  9. பிரச்சினை தொடர்பான எண்ணளவு பெறுமானங்களையும் பண்பளவு பெறுமானங்களையும் கண்டறிதல்.
  10. புதிய எண்ணக்கருக்களையும் (CONCEPTS) கோட்பாடுகளையும், விதிகளையும் நிறுவுதல், பழையவற்றை பொய்ப்பித்தல்.
  11. அறிவுப் பரப்பில் புதிய தூண்டிகளையும், துலங்கல்களையும் முன் வைத்தல்.
  12. புதிய தீர்மானங்களைப் எடுப்பதற்கு உதவுதல்.
  13. ஆய்வுகள் வழியாக சமூகப் பயனுடமைக்கு உதவுதல்.
  14. பழைய ஆய்வுகளின் பொருண்மை நிலைகளைக் கண்டறிதல்.
  15. அறிவின் செயற்பாடுகள் தொடர்பான திறனாய்வுகளை முன்னெடுத்தல்.

சிறந்த ஆய்வின் பண்புகள்.

  1. ஆய்வின் நோக்கங்களும், குறிக்கோள்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கும்.
  2. போதுமான தகவல்கள், தரவுகள் முதலியவற்றின் திரட்டல்களை உள்ளடக்கியிருக்கும்.
  3. பொருத்தமான முறையியல்களை பயன்படுத்தியதாக இருக்கும்.
  4. நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்கும்.
  5. புறவயமான அணுகு முறைகளையும், பக்கம் சாராததும், முற்சாய்வு கொள்ளாததுமான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும்.
  6. போதுமானதும், பொருத்தமானதுமான தரவுகளில் இருந்தே முடிவுகளை அண்மித்ததாயிருக்கும்.
  7. முன்னர் ஒளிவீசப்படாத தரிசனங்கள் மீது ஒளி பாய்ச்சப்பட்டிருக்கும்.
  8. ஆய்வுக்குரிய தருக்கத் தெளிவுடையதாயிருக்கும்.
  9. ஆய்வுக்குரிய மொழிச் செறிவு மற்றும் மொழிக் கட்டுமானம் முதலியவற்றைக் கொண்டிருக்கும்.
  10. ஆய்வின் சமர்ப்பணம் செவ்விதமாக அமைந்திருக்கும்.

ஆய்வு தொடர்பாக நமது நாட்டில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் பற்றியும் அடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஆய்வுக்குரிய போதுமான பயிற்சிகள் முனனெடுக்கப்படாமை ஆய்வுப் பண்பாடு (RESEARCH CULTURE) வலிதாகக் கட்டியெழுப்பப்படாமை, ஆய்வு மேற்பார்வைக்குரிய ஆளணியின் போதாமை, ஆய்வுக்குரிய ஊக்கல் போதாமை, அறிவு வசதிகளிலும் வளங்களிலும் வற்கடம் காணப்படுதல். தகவல்கள் மற்றும் தரவுகள் பெறுதலிலே பல்வேறு இடர்பாடுகள் காணப்படுதல். முதலாம் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டியுள்ளது.

ஆய்வுப் பிரச்சினையை வரையறை செய்தல்.

தெளிவாக, நன்கு வரையறை செய்யப்பட்ட ஆய்வுப் பிரச்சினையைத் தெரிந்தெடுத்தல் ஆய்வு செயல்முறையின் அடித்தளமாக கருதப்படுகிறது. பிரச்சினை யாது என்பதை இனங் காணுதலும் அதன் பன்முகப் பரிமாணங்களை நோக்குதலும் பிரச்சினையை வரையறுத்தலுடன் தொடர்புடையன.

பிரச்சினைகள் உருவாகும் நிலைமைகள் பின்வருமாறு பாகுபாடு செய்யப்படுகின்றன.

  1. தனிநபர் அல்லது தனி நிறுவனம் அல்லது ஒரு தனி அலகு தொடர்பான உள்ளமைந்த காரணிகளாலும் வலுக்களாலும் ஏற்படும் பிரச்சினைகள்.
  2. சூழல்சார் பண்புகளோடு அல்லது சூழல்சார் காரணிகளோடு எழும் பிரச்சினைகள்.
  3. மாறிலிகளின் இடைவினைகளாலும், இடைத்தாக்கங்களாலும் ஏற்படும் பிரச்சினைகள்.
  4. பன்முக காரணிகளின் தாக்கங்களினால் ஏற்படும் பிரச்சினைகள்.
  5. கட்டமைப்புக்கள் அல்லது நிரல் அமைப்போடு தொடர்புடைய பிரச்சினைகள்.
  6. மையப்படுத்தல் அல்லது பரவலாக்கலோடு தொடர்புடைய பிரச்சினைகள்.
  7. வரலாற்றுக் காரணிகளோடு தொடர்புடைய பிரச்சினைகள்.
  8. அரசியல், பொருளியல், அதிகாரவியல் முதலாம் பண்புகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள்.
  9. உயிரியல் பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
  10. சேதன அசேதன பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
  11. கல்வி, பண்பாடு மற்றும் தொடர்பாடற் பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
  12. உற்பத்தி முறைமை மற்றும் இயக்க முறைமைகளோடு இணைந்த பிரச்சினைகள்.
  13. அறிவாதாரங்களோடு இணைந்த பிரச்சினைகள்.
  14. இலக்குகள், நோக்கங்கள் மற்றும் முகாமைத்துவத்தோடு தொடர்புடைய பிரச்சினைகள்.

இவ்வாறு பிரச்சினைகள் பல்வேறு பாகுபடுத்தல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றன. ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் பொழுது மிகவும் அற்பமான அல்லது மிகவும் எளிதான ஒரு பிரச்சினையைத் தெரிவு செய்தல் உயர்மட்ட ஆய்வுகளிலே தவிர்த்து விடப்படுகின்றன.

அவ்வாறு அதிக அளவு ஆழ்ந்து பரந்த ஆய்வுகள் செய்யப்பட்ட பிரச்சினைகளும் பொதுவாக தவிர்த்து விடப்படுகின்றன.

ஆய்வுப் பிரச்சினை ஒன்றை தெரிவு செய்தல் என்பது முன்னறிதற் கற்கை (PRELIMINARY STUDY)யுடன் தொடர்புடையது. பிரச்சினைகளை கண்டறிவததற்கான கற்கை ஆய்வுக்கு அடிநிலையாகின்றது. பிரச்சினைகளைக் கண்டறிந்தும் அவற்றின் பரப்பளவை, அவற்றின் எல்லைகளை அதன் செயல்நிலைகளை இனம்காணுதல் அதனோடு இணைந்த ஆய்வுகளை, தகவல்களையும் உசாவுதல் ஆய்வறிவாளருடன் கலந்துரையாடுதல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்குரிய பிரச்சினைத் தலைப்பை மொழிவடிவாக்குதல் வேண்டும்.

பிரச்சினையை மொழிவடிவாக்கும் போது மொழிக் கட்டுமானம் வழுவற்ற மொழி வழங்கல் பொருத்தமான கலைச்சொற்பிரயோகம் தெள்ளத் தெளிந்த மொழி முதலியவற்றிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நொதுமலான சொற் பிரயோகங்கள் தவிர்க்கப்படுவது சாலச்சிறந்தது.

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் போன்று பொதுவாகப் பிரச்சினைகளும் அவற்றுக்குரிய கோட்பாட்டு வடிவம் என்ற அறிமுறையை ஒரு பரிமாணமாகவும் அதன் செயல் வடிவத்தை மறுபரிமாணமாகவும் வரையறுத்தலுக்குத் துணையாக அமையும்.

ஆய்வு வடிவமைப்பு

ஆய்வுப் பிரச்சினையை இனம் கண்டதும் ஆய்வு வடிவமைப்பு (RESEARCH DESIGN) பற்றி அடுத்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஆய்வுப் பிரச்சினையை வடிவமைக்கும் பொழுது ஆய்வாளர்கள் சில அடிப்படை வினாக்களை எழுப்புதல் வேண்டும். அவை வருமாறு.

  1. ஆய்வு எந்த உள்ளடக்கத்தை இறுகப்பற்றுகிறது?
  2. இந்த ஆய்வின் இலக்குகள் யாவை?
  3. ஆய்வு ஏன் மேற்கொள்ளப்படுகின்றது?
  4. எங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது?
  5. எந்த ஆய்வு முறை அல்லது ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன?
  6. பொருத்தமான தகவல்களையும் தரவுகளையும் எங்கு பெற்றுக் கொள்ளலாம்?
  7. ஆய்வுக்குரிய கால அளவு என்ன?
  8. ஆய்வுக்குரிய செலவுகள் என்ன?
  9. எத்தகைய உபாயங்களை கையாண்டு தகவல்களையும், தரவுகளையும் பெறுதல்?
  10. தகவல்களையும், தரவுகளையும் எவ்வாறு பகுப்பாய்வு செய்யலாம்?
  11. ஆய்வறிக்கையை எவ்வாறு தயாரிக்கலாம்?

ஆய்வு வடிவமைப்பானது பிரச்சினை பற்றிய தெளிவான விளம்பல், ஆய்வு நோக்கங்கள், பயன்கள், தேவைகள், தகவல்கள், திரட்டல் தொடர்பான ஆதாரங்கள், நுண் முறைகள், வழிமுறைகள், எத்தகைய ஆய்வு முறை அல்லது ஆய்வுமுறைகள் கையாளப்படவிருக்கின்றன என்பவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

ஆய்வு வடிவமைக்கும் பொழுது ஆய்வு சார்ந்த அளவுப் பெறுமானங்கள் பற்றியும் பண்புப் பெறுமானங்கள் பற்றியும் தெளிவு கொள்ளல் வேண்டும். பண்பளவு பெறுமானங்களை எண்ணளவு பெறுமானங்களுக்கு கொண்டுவர முடியுமா என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும். மறுபுறம் எண்ணளவு பெறுமானத் தொகுப்பிலிருந்து பண்புசார் நிலைமைகளின் செறிவுகளைக் கண்டறிய முடியுமா என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.

எத்தகைய கருதுகோள் (HYPOTHESIS) அல்லது கருதுகோள்கள் ஆக்கப்படல் வேண்டும், பரீட்சிக்கப்படல் வேண்டும் என்ற திட்டமிடலையும் ஆய்வு வடிவமைப்பானது தேவைக்கேற்றவாறு கொண்டிருத்தல் வேண்டும். ஆய்வுமுறைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு ஆய்வுக் கட்டமைப்பும் வேறுபடும். உதாரணமாக பரிசோதனை ஆய்வுமுறைக்கும் விவரண ஆய்வுமுறைக்குமிடையே ஆய்வுக் கட்டமைப்பு வேறுபட்டுக் காணப்படும்.

ஆய்வின் அடிப்படை நெறிகள்

  1. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் அல்லது பிரச்சினை அல்லது எண்ணக்கரு பற்றிய தெளிவு
  2. ஆய்வாளருக்கு அந்த ஆய்வுப் பொருள் பற்றிய அறிவு முன்னனுபவம் பற்றிய மதிப்பீடு அவசியமாகின்றது.
  3. நன்கு தெரிந்த விடயங்கள் யாவை, தெரியாத விடயங்கள் யாவை, ஓரளவு தெரிந்தவை யாவை, ஊகித்து அறிந்தவை யாவை, என்பவை பற்றிய தெளிவு.
  4. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் பற்றி இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள், அவற்றின் முடிவுகள் முதலியவற்றை தொகுத்துக் கொள்ளல்.
  5. குறித்த ஆய்வுக்குரிய வள ஆளணியினர், வள நிலையங்கள், வளப் பொருட்கள் பற்றிய விபரங்களை திரட்டிக் கொள்ளல் - இதற்கு இன்ரனெற் எனப்படும் தொடர்புப் பின்னலின் உதவியைப் பெறலாம்.
  6. மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆய்வுப் பொருள் பற்றிய அறிவின் இயல்பு நிலை (STATE OF KNOWLEDGE) பற்றி தெரிந்து கொள்ளல்.
  7. ஆய்வின் செல்நெறியைத் தீர்மாணித்தல்.
  8. போதுமான அளவுக்குத் தகவல் திரட்டுதல்.
  9. பொருத்தமான முறையியலைப் பயன்படுத்தி ஆய்வு முன்னெடுத்தல்.
  10. ஆய்வின் வழியாக மெய்மைக்கு ஒளிப்பாய்ச்சுதல்.
  11. தான் எதிர்பாராத முடிவுகள் ஆய்வுகளிலே வெளிவந்தாலும் மனம் கோணாது ஏற்றுக் கொள்ளல்.