Elements of Education & School Management

கல்வியின் அடிப்படைகளும் பாடசாலை முகாமைத்துவமும்

கார்ல் மார்க்ஸ் (karl Marx 1818-1883)

வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் என்கின்ற கார்ல் ஹென்றிச் மார்க்ஸ் (Karl Heinrich Marx) இன்றைய  ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் ஒரு யூதனாக மே 5  1818 இல் பிறந்தார். இவரது குடும்பம் யூத குடும்பமாக இருந்தாலும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றியது. இவரது தந்தை ஹென்றிச் மார்க்ஸ் ஓர் வசதி படைத்த வழக்கறிஞர்,  குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான கார்ல் மார்க்ஸ்க்கு 1830 வரை தனிப்பட்ட  முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது.

கார்ல் மார்க்ஸ் தனது 17 வது வயதில் சட்டம் பயில பான் பல்கலைக்கழகம் சென்றார்.  பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் துறைகளில் பட்டம் பெற்ற இவர்  யெனா பல்கலைக்கழகத்தில் கிரேக்க ஆதி மெய்யியலாளர் இருவரது கருத்துக்களை ஒப்பீட்டு ஆராய்ந்து 1841 இல் மெய்யியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 

இக்காலப் பகுதியில் ஹெகலிய கோட்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழகினார். அக்கால  அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் அவரது சிந்தனை ஈர்க்கப்பட்டது. மெய்யியல்  பேராசிரியராக பணியாற்ற விரும்பினார். ஆயினும் அவரது சுதந்திர சிந்தனை அவரது நோக்கிற்கு இடையூறாக அமைந்தது.

"ரைனிஸ் சைத்துங்" என்ற புரட்சிகர செய்தித்தாளில் இணைந்து கட்டுரைகளை எழுதினார். 

1842 இல் பாரிஸ் சென்றார். அங்கு பிரட்றிக் ஏங்கெல்சை சந்தித்தார். இருவரும் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின்  கொள்கைத்திட்டத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர்.

1845 பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டார். ஜெர்மனிக்குச் சென்ற அவர் தொழிலாளர் கழகத்தை ஆராம்பித்தார்.

1847 மெய்யியலின் வறுமை என்ற நூலை எழுதினார். இது மெய்யியலின் விமர்சனமாக வெளிவந்தது.

1849 ஜெர்மனியிலிருந்தும் நாடுகடத்தப்பட்டார். பின்னர் இங்கிலாந்துக்குச் சென்ற கார்ல் மார்க்ஸ் தனது வாழ்நாளை இறுதிவரை அங்கேயே கழித்தார்.

இலண்டன் மியூசியத்தின் நூலகத்தில் தொடர்ந்து நூல்களையும் ஆவணங்களையும் படித்து அரசியல், பொருளாதாரம் பற்றி நிறைய அறிந்து கொண்டார். 

தொழில்சார் முதலாளித்துவம் பற்றிய அவரது பகுப்பாய்வு 1859 இல் “அரசியல் பொருளாதார விமர்சனம்" என்ற நூலாக வெளிவந்தது,

1867 மூலதனம் (Capital) என்ற நூலை எழுதினார். முதலாளித்துவ உற்பத்தி பற்றிய அவரின் பிரதான படைப்பு இந்நூலாகும்.

1883 இல் கார்ல் மார்க்ஸ் மரணமடைந்தார்.

1883 1894 க்கும் இடையில் மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் வெளிவந்தன. அவரது நூல்களில் காணப்படும் கல்வி பற்றிய சிந்தனைகள் கல்வியுலகில் பெரும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தின. வறுமையிலேயே வாடி வாழ்நாளைக் கழித்த கார்ல் மார்க்ஸ் வறியவர்களின் விடுதலைக்கு வழிதேடிய சமதர்ம உலகைப் படைக்கவே சிந்தித்தார்.

கார்ல் மார்க்ஸின் கல்வித் தத்துவம்

“தத்துவம் என்பது உலகத் தோற்றம் பற்றிய விளக்கங்களை அளிப்பது மட்டுமல்ல. அது உலகை மாற்றியமைப்பதாக இருக்க வேண்டும். தத்துவம் கருத்துக்களின் வெளிப்பாடு மட்டுமல்ல மனிதனை செயற்றிறன் மிக்கவனாக மாற்றுவதே" என்பது அவரது வாதமாகும்.

எல்லோருக்கும் சுதந்திர வாழ்வு எல்லோருக்கும் சமநீதி என்ற தத்துவ நோக்கில் மார்க்ஸின் கல்விச் சிந்தனை உருவானது.

கல்வி பற்றி சிந்திப்பவர்கள் மாக்ஸிஸ சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும், மார்க்ஸ் முன்வைத்த கல்வி தொடர்பான சிந்தனைகளை பின்பற்ற முயல்வதை உலக வரலாறு காட்டுகின்றது,

தத்துவத்தால் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு கல்வியே  உந்துகோல் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

மனித, பௌதீக வளங்களை உச்சளவில் விருத்தி செய்து, அவற்றின் விளைவைநியாயமான முறையில் பகிர்ந்தளித்தலே மார்க்ஸிஸ கல்வித் தத்துவமாகும்.

மனிதனது ஆக்கத்திறனே எங்கும் பரந்து பதியப்பட்டுள்ளன என்பதை வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கண்டு கொண்ட கார்ல் மார்க்ஸ் கல்வியை உற்பத்திக்கான கருமம் என்பதை ஏற்றுக் கொண்டார்.

அவரது கருத்துப்படி கல்வி மனிதரிடத்தே தன்னம்பிக்கையை தோற்றுவிக்க வேண்டும். மனிதன் எங்கும் அடிமைப்படுத்தப் பட்டுள்ளான்.

அடிமை விலங்கு அறுத்தெறியப்பட வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரம். மனிதன் தனது உண்மையான மனித வலுவை உணரவேண்டும். அதன் மூலமே தன்னம்பிக்கை உதயமாக, தன்னை விடுவிக்கும் சிந்தனையில் ஈடுபட முடியும்.

கல்வி அவனுக்கு போராடும் சிந்தனையையும், அதற்கான வலுவையும் தரவேண்டும். மூலதனம் என்ற நூலிலும், 1866 இல் ஜேர்மன் தூதுக்குழுவுக்காக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் சமர்ப்பிப்பதற்காக தயாரிக்கப்பட்ட கல்வி அறிக்கையிலும், 1875 இல் ஜேர்மனியின் தொழிலாளர் கட்சிக்கான கொள்கைத் திட்டத்திலும் மார்க்ஸின் கல்வி தொடர்பான முன் மொழிவுகளைக் காணலாம்.

கல்வி நிலையங்கள் அனைத்தும் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட வேண்டும். 

சமய ஆதிக்கத்திலிருந்து பாடசாலைகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். ஆதிக்கம் மனித சிந்தனையை மழுங்கடித்து அவனை தனது அடிமை நிலையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் மயக்க நிலைக்கு இட்டுச் செல்லும்.

கல்வி கட்டாயப்படுத்தப்படல் வேண்டும். கல்வி பொதுக் கல்வியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டின் அது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுதல் வேண்டும்.

கல்வியானது தனியாளை அடிமை நிலையிலிருந்து மீட்பதற்கு வழிவகுப்பதாய் இருத்தல் வேண்டும். பாடசாலைகள் விஞ்ஞான அடிப்படையில் சுதந்திரமாகக் கலந்துரையாடக் கூடிய இடமாக மாற்றப்பட வேண்டும்.

வர்க்க பேதமற்ற சமூக அமைப்பில் கல்வி எவ்வித வேறுபாடும் பாராட்டாத வகையில் சமமாக, ஒரே தன்மையாக வழங்கப்படுதல் வேண்டும்.

ஒரு நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிக்கத்தின் கீழ் கல்வி வழங்கும் பொறுப்பு  ஒப்படைக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்டம், கல்வி நிர்வாக நடைமுறை முற்றிலும் அத்தகைய அரசினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

ஆட்சியின் குறிக்கோளுக்கமைய, அரச கோட்பாட்டிற்கமைய கல்வியின் மூலம் மக்கள் அரசுடன் இயைந்து செயற்படக் கூடிய வகையில் கல்விக் கருமம் வழிநடாத்தப்படுதல் வேண்டும்.

ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த கர்த்தாக்களான தொழிலாள வர்க்கத்தினரது பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வழிமுறையே இது என்கிறார் மார்க்ஸ். பாடசாலை வேலைத் திட்டங்களில் பொது மக்கள் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும்.

தமது பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி அவர்களால் கண்காணிக்கப்படுதல் வேண்டும்.  அபிவிருத்தியடைந்த மனிதனை உருவாக்குவதே கல்வியின் குறிக்கோள் ஆகும். அவன் தொழில் சார்ந்த கருமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவு, உடல் வளர்ச்சி, தொழிநுட்பம் ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாக கல்வி இருக்க வேண்டும்.

கல்வி பெறுபவன் உற்பத்திக் கருமம் தொடர்பான திறன்களைப் பெற்றிருக்க வேண்டும்,  அத்தகைய பயிற்சியை வழங்குவதற்கான உற்பத்தி வேலைத்திட்டமொன்று கற்போனின் பருவத்திற்கேற்ப அதற்கேற்ற வகையில் அறிவு சார் கற்றலுடன் தொடர்பு பெற வேண்டும்.

9 - 12 வயதுக்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் வேலைத் தளமொன்றில் உற்பத்திக் கருமத்தில் ஈடுபட வேண்டும். 

13 - 14 வயது வரை நெளொன்றுக்கு 4 மணி நேரமும், 14 – 17 வயது வரை நாளொன்றுக்கு 6 மணி நேரமும் உற்பத்திக் கருமங்களில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும்.

உற்பத்திக் கருமத் தொடர் என்பது பயனுடையதாக இருத்தல் வேண்டும். கல்வியின் வெற்றி இத்தகைய பயிற்சிகளிலேயே தங்கியுள்ளது.

உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் எளிமையான உபகரணங்கள் தொடர்பான அடிப்படைத் திறன்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

அது அறிவு சார் கல்வி அபிவிருத்தியுடன் தொடர்பு பெற்றிருத்தல் வேண்டும். எனவும் மார்க்ஸ் வலியுறுத்துகின்றார்.

1866 சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்துக்காகத் தயாரிக்கப்பட்ட வேலைத் திட்டத்தில் இத்தகைய விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏ. என். கியோன்ரைன் என்ற ரஸ்ய உளவியலாளர் உற்பத்திக் கருமத் தொடர் தொடர்பான முக்கியமான அடிப்படைப் பகுப்பாய்வை மார்க்ஸ் மேற்கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.

பொதுக் கல்வி என்பது எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கும் அடிப்படையான கல்வியாகும். அதை இலவசமாக வழங்கும் போது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடியதாக அமையும். இதற்கான சட்டங்கள் அரசினால் வகுக்கப்பட வேண்டும்.

சிறுவர்கள் தமது கல்வி உரிமையை அடையத் தடையாய் இருப்பது அவர்களைக் கல்வி கற்கும் பராயத்தில் வேலைக்கமர்த்தும் நடவடிக்கையாகும். ஆகவே தொழிற்சாலைகளில்  சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நடவடிக்கைகள் சட்டத்தால் தடை செய்யப்படுதல் வேண்டும். என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

இவ்வாறு செய்வதனூடாக சிறுவர்களது கல்வி உரிமையை நடைமுறைப்படுத்தலாம் என மார்க்ஸ் கருதினார்.

கல்வியையும் உற்பத்தியையும் தொடர்புபடுத்துவதன் மூலம் அத்தொடர்புபடுத்துதல் கலைத்திட்ட விஞ்ஞான நோக்கத்திற்கு அமைவாக இருப்பதனால் சிறுவர்கள் உழைப்புத்  தொடர்பான அனைத்து அறிவையும் அது தொடர்பான கல்வி நடைமுறையையும் விளங்கிக் கொள்ள முடியும் என மார்க்ஸ் கருதினார்.

குழந்தை சமூகத்தின் சூழலிலேயே வளர்கிறது. சூழலோ மனிதனது ஆக்கத் திறனினால் வடிவமைக்கப்பட்டது. அச் சூழலைப் பற்றிய முழுமையான அறிவு குழந்தைக்கு வழக்கப்பட வேண்டும்.

தனது சூழலை நன்கு அறிந்து அச்சூழலுடன் தன்னைப் பொருத்திக் கொள்ள மொழி அவனுக்கு கருவியாகிறது. மனித தொடர்பாடல் ஊடகமே மொழி,

ஒவ்வொரு தனியாளும் முழுமையான விளக்கத்தைப் பெறுவதற்கு மொழி உரியவாறு  பயன்படுத்தப்பட வேண்டும். கல்வியைப் பெறுவதில் மொழியின் பங்கை மார்க்ஸ் நன்கு வலியுறுத்தினார்.

இயல்பு நிலையை உரியவாறு அறிந்து கொள்வதில் மொழி பிரதான பங்கு வகிக்கின்றது. 

தனது முன்னோர்களின் திறன்களைப் பெற்றுக் கொள்ளவும், அவன் முழுமையான கற்றோனாக மாறவும் மொழியின் துணை அவசியமாகிறது.

மொழி என்பது “செய்முறை ஞானம்" என்றும் “பண்பாட்டின் மூலதனம்" என்றும் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். இவ் வகையில் ஒவ்வொருவனும் தனது தாய் மொழியில் கல்வி பெற வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெறுகின்றது.

ஒரு சமூகத்தின் ஒழுக்கம், விழுமியங்கள், நம்பிக்கைகள், ஒன்றுதொகுக்கப்பட்ட அறிவுக்கதிர்கள் என்பனவற்றின் ஒரே களஞ்சியம் மொழி வாழ்க்கை தொடர்பான அனுபவங்களைப் பெற தாய் மொழியே சாத்தியமானது.

மொழி மூலமே திறன்கள் வளர்கின்றது. ஜோண் டுயியின் தத்துவம் கார்ல் மார்க்ஸின் தத்துவத்தோடு நெருங்கிக் காணப்படுகின்றது.

கார்ல் மார்க்ஸின் கல்வி சிந்தனை குறித்த தற்கால நோக்கு

முன்பிருந்த கல்வி மன வளர்சி பற்றியே சிந்தித்தது. உழைப்பு கல்வியின் மூலம் வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனை பெரிதுபடுத்தப்படவில்லை. உழைப்பை உயர்வாக எண்ணுவதற்குப் பதிலாக இழிவாக எண்ணும் நிலையே பழமையான கல்விச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டது. இன்று அதே மனநிலை ஒரேயடியாக நீங்கி விட்டது  என்று சொல்வதற்கில்லை. மனித மனதில் உடலுழைப்பு, உள வளர்ச்சி இரண்டும்  வெவ்வேறாகக் கொள்ளப்பட்டது. உடலுழைப்பிற்கு கல்வி அவசியமில்லை என்ற கருத்தும் உள்ளது. மார்க்ஸ் உடல்வளர்ச்சி (உழைப்பு) மனவளர்ச்சி இரண்டும் ஒருங்கிணையும் போதே மனித முழு வளர்ச்சி ஏற்படும் என வலியுறுத்துகின்றார்.

கல்வி அரசியல் மயமாவதால் தூய்மை இழந்து விடும் என்ற கருத்துவாத சிந்தனையாளர்களின் கூற்றை மார்க்ஸ் முற்றாக மறுக்கிறார். அரசு மக்களினால் உருவாக்கப்பட்டது. முக்களின் மொத்த அபிப்பிராயத்தின் வடிவமே பொதுவுடமை அரசு ஆகவே ஆளப்படுவோர் - ஆள்வோர் என்ற வேறுபாடு இங்கில்லை. ஒரு சமூக வகுப்பே இங்குள்ளது. ஆகவே ஆளும் சமூகத்தின் அபிப்பிராயங்கள் மீதே பாடவாலைக் கலைத்திட்டமும், கல்வி நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார்.

இன்று தேசிய வருமானத்தில் கல்விக்கென நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகவே எந்த அரசும் தனது நோக்கங்களை அடையவே கல்வியைத் திட்டமிட வேண்டு என்ற கருத்து நடைமுறையிலுள்ளது எனலாம். ஆகவே கல்வி அரசின் நோக்கத்திற்கமைய செயற்பட வேண்டும் என்ற மார்க்ஸின் கருத்து நியாயமானதே.

கல்வி நோக்கிற்கமையவே ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என மார்க்ஸ் கூறுகின்றார். ஆசிரியர்களே கல்வியின் செயற்றிறனை ஏற்படுத்தும் உந்து சக்தி, ஆசிரியரது வாழ்க்கைக் கண்ணோட்டம் மனித சமூக விடுதலை, அவிருத்தியடைந்த பொதுவுடமை மனிதன், சமமான வளப்பங்கீடு, எல்லோருக்கும் வாழ்வு, பேதங்கள் நீங்கிய சமவகுப்பு என்பவை பற்றியதாக இல்லாவிடின் அக்கல்வி செயலிழந்ததாகிவிடும்.

ஆகவேதான் பொதுவுடமை நாடுகளில் ஆசிரியரே முதற்தர ஊழியராக உயர்த்தப்பட்டு உயர் ஊதியமும் பெறுகிறார்கள். சோவியத் ஒன்றியம் உடையும் வரை சிறந்த சோவியத் குடிமகனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. இச் சிந்தனை பிளேட்டோவின் சிறந்த குடிமகன் என்பதை ஒத்ததாகும்.

மாதிரி வினாக்கள்

  1. மார்க்ஸிஸ கல்வியின் அடிப்படைகளைத் தருக?
  2. பாடசாலையும் சுதந்திரமும் என்று மார்க்ஸ் கருதுவது யாது
  3. கல்வியின் மனித வளர்ச்சி என்ற மார்க்ஸின் கருத்தை சுருக்கமாக விளக்குக?
  4. பொதுக்கல்வி பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தை விளக்குக?
  5. கல்வியும் அரசும் பற்றிய மார்க்ஸின் கருத்தை தெளிவுபடுத்துக
  6. கல்வியில் மொழியின் பங்கு பற்றி மார்க்ஸின் கருத்து யாது?
  7.  பொதுவுடமை வாதம் என்று மார்க்ஸின் கல்விக் கருத்துக்களை அழைப்பது பொருத்தமா?
  8. மார்க்ஸின் பார்வையில் கல்வி முக்கிய சாதனமாகக் கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் யாவை?
  9. இலங்கையின் பொதுக்கல்வியில் கார்ல் மார்க்ஸின் கருத்துக்கள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன?
  10. உடலும் உள்ளமும் ஒருங்கே வளர்க்கப்பட்வேண்டும் என்று மார்க்ஸ் கருதியமைக்குரிய அடிப்படை யாது?

S.Logarajah 

SLTES 

Lecturer, 

National College of Education 

Batticaloa.