இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் நடந்து வருகின்றது.

பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களும்:

இலங்கை சப்ரகமுவ – மத்திய மாகாணங் களுக்கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் உயரத்தில் கூம்பு வடிவிலான மலை உள்ளது. இதில் ஒரு பெரிய மனிதக் கால் தடம் உள்ளது. இதனை புத்தரின் பாதப் பாதத் தடம் ‘சிறீபாத’ என பௌத்தர்களும், சிவனின் கால்தடம் ‘சிவனொளிபாத மலை’ என இந்துக்களும், முதல் மனிதர் ஆதம் நபியின் பாத அடையாளமே அது. எனவே, இது பாவாத மலை என முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் குறிப்பிடுகின்றனர்.
முதல் மனிதர் இலங்கையில் இறக்கப் பட்டதற்கான நேரடியான ஆதாரங்கள் இல்லை. என்றாலும் அல்குர்ஆனின் விளக்கவுரைகள் பலவற்றிலும் ஆதம் நபி இந்தியாவில் உள்ள செரண்டிப் எனும் இடத்தில் அமைந்துள்ள மலையில் இறக்கப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் மிக ஆதி காலம் தொட்டே மனித இனம் வாழ்ந்திருந்தமை பற்றி விக்கிபீடியா விரிவாகப் பேசுகின்றது. 125000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பாவாத மலைக்கு அருகில் உள்ள பலாங்கொடை மனிதன் பற்றியும் பேசப்பட்டுள்ளது. அரபிகளிடம் முதல் மனிதர் ஆதம்(அலை) வாழ்ந்த இடம் இலங்கை என்ற எண்ணம் இருந்ததால் ஆதிகாலம் தொட்டே அவர்கள் இலங்கையுடன் தொடர்புபட்டிருக்கலாம்.

அத்தோடு அரேபியர் பண்டைக் காலம் முதல் இந்து சமுத்திரத்தை அறிந்து வைத்திருந்ததுடன் அடிக்கடி கடற்பயணங்களை மேற்கொள்ளவும் பழக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தென் ஆசியா, தென் கிழக்கு ஆசியப் பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு ஆர்வம் கொண்டிருந்தனர்.

இலங்கை-அரேபியர் தொடர்பு:

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் அரபிகள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத வரலாறாகும்.

கி.மு. 310 இற்கு முன்பிருந்தே அவர்கள் மடகஸ்கர், சுமாத்ராவுக்கு இடையே வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இலங்கையை இடையிலுள்ள ஒரு வலயமாக வைத்து அந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். மலபார் கடலோரங்களிலும் இலங்கையிலும் இருந்த அரேபியர் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் நிபுணர்களாகக் காணப்பட்டதாக பிளினி (கி.பி. 23 - 79) குறிப்பிடுகிறார்.
தொலமியின் வரைபடம்:

கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே அரேபியர் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் பலவற்றையும் காண முடிகின்றது.
க்ளோவ்டியஸ் தொலமி (Claudius Pthomy – கி.பி. 140) உலக வரைபடத்தை வரைந்தார். அதில் இலங்கை (தப்ரபேன் – TAPROBANE) என குறிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் இலங்கையின் பிரதான நதிகள் ஐந்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மூன்று நதிகள் வெளிநாட்டுப் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில், மகாவலி கங்கை – பாரசீக நதி ஜின் கங்கை – எதியோப்பிய நதி தெதுருஓயா – சோனா பலூஸியஸ் அரேபியர் நதி என்றும் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 150 இல் ஒரு நதி அரேபியர் நதி என்று கூறப்படுகின்றது என்றால் அதற்கு முற்பட்ட காலம் தொட்டே அங்கு அரேபியர்கள் குடியிருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தொலமி குறிப்பிட்ட இந்தப் பிரதேசம் அரேபியரின் பிரதான குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிப்பதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் – வரலாறும் வாழ்வியலும்’ (2009) என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துவுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட பண்டுகாபய மன்னன் (கி.மு. 377-307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கு அருகில் சோனகர்களுக்கென ஒரு நிலப்பரப்பை ஒதுக்கிக் கொடுத்ததாக இலங்கையின் வரலாற்றுக்கு மூல ஆதாரமாகக் கொள்ளக் கூடிய மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
சுலைமான் நபிக்கு சபா இளவரசியால் அனுப்பப்பட்ட அன்பளிப்புப் பொருட்களில் இலங்கைப் பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படும் தகவல்களை வைத்து, சபா இளவரசி இலங்கையில் இருந்த அல்லிராணிதான் என்று கூறப்படுவதும் உண்டு. இது தொடர்பாக எம்.கே.ஈ. மௌலானா எழுதிய ‘சேது முதல் சிந்து வரை’ (மனித இன ஆய்வு) என்ற நூல் விரிவாகப் பேசுகின்றது. இவை அத்தனையும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கைக்கும் அரேபியர்களுக்கும் இருந்த மிக இறுக்கமான, நெருக்கமான உறவுக்கான ஆதாரங்களாகும்.

கிளி விடு தூது:

இலங்கை முஸ்லிம்கள் சோனகர்கள் என்று அழைக்கப்படுவர். கி.பி. 140 இல் எழுதப்பட்ட சிங்கள காவியமே ‘கிரா சந்தேசய’ – கிளி விடு தூது ஆகும். அதில் பேருவளைப் பகுதியில் அப்போதே ‘சோனகர்’ வாழ்ந்தமை பற்றிப் பேசப்பட்டுள்ளது.
‘பல வகைக் கொடிகளாலும் பலவாறாக அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு அழகு நகைகளால் நிரம்பிய கடைகளும், அதிகமாக இருக்கும் பேருவளைக்குள் கடல் வழியாக மன நிறைவோடு நீ நுழைவாயாக! அங்கு தங்கத் தோடுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்கின்றனர்’ என்று சோனகப் பெண்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் பிறப்பு, இறப்பு மற்றும் இன ரீதியான கணிப்பீடுகளின் போது ஆங்கிலத்தில் ‘ஆழழசள’ என்றும், சிங்களத்தில் ‘யோனக’ என்றும் அழைக்கப்படுவர். முஸ்லிம்கள் இன ரீதியான அடையாளத்தை விட மத ரீதியில் தம்மை இஸ்லாமியர் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆதிகாலம் தொட்டே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான சோனகர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கே சோனகர்கள் என்று குறிப்பிடப்படுவது அரபிகளையா அல்லது முற்காலம் தொட்டே இலங்கையில் வாழ்ந்து வந்த ஒரு இனத்தையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர்கள் காணப்பட்டதாக ‘THE PERIPLUS OF THE ERYTRA EAN SEA’ என்ற கிரேக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ‘கிளி விடு தூது’ குறிப்பிட்ட செய்தியும் இதை உறுதி செய்கின்றது. பேருவளை கடல் பிரதேசத்தில் சோனகப் பெண்கள் செழிப்போடு வாழ்ந்திருப்பதை இரு செய்திகளும் உறுதி செய்கின்றன.
இதுவரை நாம் குறிப்பிட்ட குறிப்புக்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட மற்றும் கி.பி. ஆரம்ப கட்ட காலம் தொட்டு இலங்கையில் அரேபியர் இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. இடைப்பட்ட கால கட்டங்களில் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வந்ததற்கான வரலாற்றுத் தகவல்களும் நிறையவே உள்ளன.
1344 களில் மொரோக்கோ நாட்டு நாடுகாண் பயணி இப்னு பதூதா இலங்கையைத் தரிசித்தார். அவர் தனது பயணக் குறிப்பில் தான் குருநாகலையில் முஸ்லிம்களைச் சந்தித்ததாகவும் அங்கு சேகு உதுமான் சீராதியின் பள்ளி இருந்ததாகவும், அவர் பாவாத மலைக்குச் செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ரிஹ்லது இப்னு பதூதா: (கைரோ 1928{iஎ37, இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும்)
இக்குறிப்பிலிருந்து 2020-1344=676 அதாவது இன்றைக்கு 676 வருடங்களுக்கு முன்னரே இலங்கையின் மத்திய பகுதிகளில் கூட முஸ்லிம்கள் கூட்டமாக வாழ்ந்திருந்தமையை அறியலாம். இவ்வாறு இருக்கும் போது, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்தனர் என்பது வக்கிரமமான வரலாற்றுத் திரிபாகும் என்பதே உண்மையாகும்.

இரண்டாம் புவனேக பாகு (1273) குருநாகலையை ஆண்ட மன்னனாவான். இவனுக்கு சந்ததிகள் இருக்கவில்லை. இவன் ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டான். அஸ்வதும (Aswaduma) எனும் இப்பெண் பேருவலையைச் சேர்ந்தவர். இவள் மூலமாக மன்னனுக்கு ஒரு மகன் கிடைத்தான். அவன் குறைஷான் இஸ்மாயில் எனும் பெயரில் வளர்ந்தான். இவ்விளவரசன் ‘வத்ஹிமி’ என்றும் ‘கலேபண்டார’ என்றும் அழைக்கப்படுகின்றான். இந்த மன்னனின் பெயரில் பேருவலையில் ‘வெத்துமி ராஜபுர’ என்று ஒரு கிரமமும் இன்று வரை உள்ளது. சிங்கள தந்தைக்குப் பிறந்தாலும் இளவரசன் இஸ்லாமிய மரபோடு முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டான். மன்னன் மரணித்த போது வேறு ஆண் சந்ததிகள் இல்லாத காரணத்தினால் முஸ்லிம் இளவரசனான இவன் ஆட்சிபீடம் ஏறினான். 1288-1290 இவன் அரசாண்ட காலமாகக் கருதப்படுகின்றது.
தான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் பௌத்த மரபை மதித்து ஆட்சி செய்தாலும் ஒரு முஸ்லிம் தம்மை ஆள்வதை விரும்பாத மதகுருக்கள் சூழ்ச்சி செய்து மன்னனைக் கொலை செய்துவிட்டனர். இந்த வரலாறு குறித்து ‘குருநாகல் விஸ்தரய’ என்ற நூல் விரிவாக விளக்குகின்றது.
இந்த இளவரசன் சம்பந்தப்பட்ட வரலாறு உண்மையானது என ‘எச்.டப்ல்யூ. கொட்ரிங்டன்’ எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (இலங்கை சுருக்க வரலாறு – தமிழ் மொழிபெயர்ப்பு: 1960, பக்கம் 75) மகாவம்சத்திலும் இம்மன்னன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மன்னன் கொல்லப்பட்ட பின்னர் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்ததால் இந்த மன்னன் சிங்கள மக்களால் கடவுளாக்கப்பட்டான். இவர் கலேபண்டார தெய்யோ என அவர்களால் அழைக்கப்பட்டார். இவர் பெயரில் தனியான ஆலயமும் உள்ளது. இவ்வாறே கலேபண்டார அவ்லியா என்ற பெயரில் கட்டப்பட்ட கப்றும் உள்ளது. முஸ்லிம்களை விட சிங்கள மக்களே அதிகமாக இந்தக் கப்றடியில் வந்து இன்று வரை வழிபட்டுச் செல்கின்றனர்.
1273-1302 களில் ஆண்ட ஒரு மன்னன் பெண் எடுக்கத்தக்க அளவுக்கு செல்வாக்குடன் முஸ்லிம்கள் வாழ்ந்திருப்பதை இது உறுதி செய்கின்றது. இதன் மூலம் 2020-1273=747 அதாவது, இற்றைக்கு 747 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் முஸ்லிம்கள் செறிவான சமூக அமைப்பாக மற்றும் அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே அரேபியர் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை அறியலாம். அத்துடன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இறுதிக் காலப் பகுதியில் உலகின் பல நாடுகளுக்கும் இஸ்லாத்தின் தூதை அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைத்த கடிதங்கள் இதற்குச் சான்றாகும். இது போலவே கீழை நாடுகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நிருபங்கள் அனுப்பப்பட்டன என்பதை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதைச் சுமந்து கொண்டு வஹப் இப்னு ஹப்ஸா என்ற தோழர் சீனாவுக்குச் சென்றார் என தோமஸ் ஆர்னல்ட் என்பவர் குறிப்பிடுகின்றார். சீனாவுக்குச் சென்றதாக ஆர்னல்ட் குறிப்பிடும் அதே நபித் தோழரான அபீ ஹப்ஸாவை ஆதாரம் காட்டி எம். ஸீ. சித்திலெப்பை தனது முஸ்லிம் நேசன் மூலம் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றார்.
“கி. பி. 628 இல் வஹப் இப்னு அபீ ஹப்ஸா எனும் தோழரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இலங்கை மன்னனிடம் அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை மன்னனிடம் கொடுத்த தோழருக்கு அவரது பணியை மேற்கொள்ள அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.” இங்கு பணியாற்றிய அவர் கி.பி. 632 இல் தனது தாயகம் மீண்டார். இவ்விரு சான்றுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாகியது என்பதற்கு ஆதாரங்களாக அமைகின்றன.
கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலப்பகுதியில் இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாகியிருக்கலாம் என ஊகிப்பதற்கு, வரலாற்றாசிரியர் இப்னு ஷஹ்ராயார் தனது அஜாஇபுல் ஹிந்து எனும் நூலில் குறிப்பிடும் பின்வரும் சம்பவம் துணை செய்கின்றது. ஏற்கனவே இலங்கையில் குடியேறி வாழ்ந்த அரேபியர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கேள்வியுற்று அது பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் தம்மிலிருந்து மிகத் திறமையான ஒருவரைத் தெரிவு செய்து அவருக்குத் துணையாக இன்னொருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர்.
இத்தூதர் அரேபியா சென்றடைந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மறைந்து அவருக்குப் பின்வந்த கலீபாவும் மறைந்து இரண்டாம் கலீபா ஆட்சியில் இருந்தார். கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து இலங்கைக்கு மீண்டார். வரும் வழியில் பாகிஸ்தான் மக்ரான் கரையில் அவர் காலம் செல்ல, அவரோடு சென்ற பணியாள் இலங்கையை அடைந்து இஸ்லாம் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார்.
கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் உமையாக் கலீபா அப்துல் மலிக் மற்றும் வலீத் ஆட்சிக் காலத்தில் ஈராக் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜின் கொடுமைக்கு அஞ்சி உமையா வம்ச அரசின் எதிரிகளாகக் கருதப்பட்ட பனூ ஹாஷிம்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக் கரையோரங்களில் குடியேறிய தகவலொன்றை ‘சிலோன்’ எனும் நூலில் சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனண்ட் குறிப்பிடுகின்றார். இதே போன்று இடம் பெற்ற மற்றுமொரு இடம்பெயர்வு நிகழ்வொன்றை வரலாற்றாசிரியர் அல்பலாதூரி தனது புதூஹுல் புல்தான் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கி. பி. 8 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அப்போதைய இலங்கை மன்னரான இரண்டாம் தாடோபதிஸ்ஸ இலங்கையில் காலம் சென்ற அரேபிய வர்த்தகர்கள் சிலரின் விதவை மனைவிகளையும், அநாதைகளான பிள்ளைகளையும் அரேபியாவுக்கு அனுப்பி வைத்தான்.
இவர்களும் இவர்கள் சென்ற கப்பலும் இன்றைய கராச்சிக்கு அணித்தாக உள்ள தேபல் எனுமிடத்தில் வைத்து கொள்ளைக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இவ்விடயத்தை அறிந்த ஹஜ்ஜாஜ் சிந்து நாட்டு மன்னன் ரோய் தாகருக்கு அப்பெண்களை உடனே விடுதலை செய்யுமாறு கடிதமெழுதினார். ஹஜ்ஜாஜின் வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டதால் சிந்து நாட்டின் மீது முஹம்மத் பின் காஸிம் தலைமையில் பெரும் படையொன்று அனுப்பப்பட்டு கி. பி. 715 இல் சிந்து பிரதேசம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது.
மேற்குறித்த சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் தோற்ற காலத்திலேயே இஸ்லாம் இலங்கையில் அறிமுகமாகியிருந்திருக்கிறது என்பதை நிறுவுவதற்குப் போதுமான சான்றுகளாகும். தொடர்ந்து வந்த காலப்பிரிவுகளிலும் குறிப்பாக, ஹிஜ்ரி 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அரபு நாணயங்கள் உறுதிப் படுத்துகின்றன.
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்லறை நடுகற்கள் கல்வெட்டுக்கள் இலங்கையில் இஸ்லாம் அறிமுகமான வரலாற்றைக் குறிப்பிடுவதற்கான மற்றுமொரு சான்றாகும். ஹிஜ்ரி 337 இல் பதிக்கப்பட்ட காலித் இப்னு பகாயாவின் கல்லறை நடுகல் 1787 இல் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் இஸ்லாத்தைப் போதிப்பதற்கென பக்தாத் கலீபாவிடமிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அரபிகளும் தொடர்ந்து அரபு முஸ்லிம்களும் இலங்கைக்கு வந்து வர்த்தக முயற்சியில் ஈடுபட்ட சமயத்திலும், அவர்கள் இங்கு வந்து குடியேறிய சமயத்திலும் அவர்களை இலங்கை மன்னர்களும் மக்களும் வரவேற்று உபசரித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் தமது வர்த்தக ஏற்றிறக்குமதிகளுக்கு வசதியாக கடலோரங்களிலேயே குடியேற்றங்களையும் பண்டகசாலைகளையும் அமைத் திருந்தனர்.
இலங்கை மன்னர்களுக்கும் மக்களுக்கும் தேவையான வெளிநாட்டுப் பொருட்களை அந்நாடுகளிலிருந்து அரபு முஸ்லிம்கள் கொண்டு வந்து கொடுத்தனர். அத்துடன் நில்லாது உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் சென்று பொருட்களையும் நாட்டையும் சர்வதேச மட்டத்தில் அறிமுகமும் செய்தனர். மேலும், அவர்கள் சுதேச மன்னர்களோடும் மக்களோடும் பண்போடு நடந்து கொண்டனர். மருத்துவ, போக்குவரத்து சேவைகளையும் இவர்கள் வழங்கினர்.
இலங்கை வந்த அரேபியரிடம் இலங்கையை ஆக்கிரமிக்கும் எண்ணமோ இங்குள்ள வளங்களைச் அவர்களுக்கு சூரையாடும் பரிச்சயமில்லாத நோக்கமோ கலாசாரப் சிறிதும் இருக்கவில்லை. இதனால் பாரம்பரியங்களைக்கொண்ட சுதேச மக்களோடு நேசமாக வாழ்வது அவ்வளவு சிரமமானதாக அமையவில்லை. ஆரம்பகால முஸ்லிம்களிடம் காணப்பட்ட இவ்வாறான நற்பண்புகளின் காரணமாக அவர்கள் இலங்கையின் ஏற்றிறக்குமதி வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றது மட்டுமன்றி வர்த்தகம் தொடர்பான விடயங்களில் அரசுக்கு ஆலோசனை கூறுவோராகவும் இருந்தனர். (Ex: பொலன்னறுவை காலப் பிரிவில் சிறப்பிற்குரிய மன்னனாக விளங்கிய மகா பராக்கிரமபாகு (1156 - 1186) வின் அரசவையில் 4 முஸ்லிம்கள் வணிக ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்)
இவர்கள் தாம் வாழ்ந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக இவர்களுக்கென்று தனியான குடியிருப்புப் பிரதேசங்கள் வழங்கப்பட்டதோடு சுதேச பெண்களையும் மணம் செய்து கொடுக்குமளவுக்கு சுதேசிகளின் உள்ளத்தை முஸ்லிம்கள் வென்றிருந்தனர். சிங்கள மன்னர் ஆட்சியில் இவர்கள் மந்திரி, தூதுவர் போன்ற உயர் பதவிகளையும் வகித்தனர். (Ex: போர்த்துக்கேயரைத் துரத்தும் நோக்கில் கள்ளிக்கோட்டை மன்னன் சாமோரினின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மன்னன் மாயாதுன்னை முஸ்லிம்களையே தூதுவர்களாக அனுப்பினான். முஸ்லிம்கள் கள்ளிக்கோட்டையிலிருந்து படையுதவி பெற்றுக் கொடுத்ததோடு நில்லாது தாமும் படையில் இணைந்து போராடினர். கண்டிய மன்னனின் தூதுவர்களாவும் முஸ்லிம்கள் செயலாற்றியுள்ளனர்.)

இக்காலகட்டத்தில் இஸ்லாமிய கிலாபத் கூட இலங்கை முஸ்லிம்களைக் கண்காணித்து வந்திருக்கிறது. அப்பாஸிய ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாஸிய கலீபா ஒருவர், காலித் இப்னு பகாயா என்ற போதகரை கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அவர் கொழும்பு நகரில் சமயப் பணி புரிந்தார். அவரது நினைவாக அவரது அடக்கஸ்தலத்தில் நடப்பட்ட கல்லறை நடுகல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பத்தில் கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை போன்ற கரையோர நகர்களிலும் பின்னர் படிப்படியாக குருணாகலை, கம்பளை, மத்திய மலைநாடு போன்ற பகுதிகளிலும் குடியேறி வாழ்ந்துள்ளனர். அவர்களின் சந்ததியினரே இன்று நம்நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தினராவர்.

இவ்வாறு தகவல்கள் காணப்படுகின்ற போதும் முஸ்லிம்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கியவர்களின் சந்ததிகளும் இங்கு உள்ளனர். முஸ்லிம்கள் அனைவரும் வெளி நாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பது தவறான கருத்தாகும்.
அப்படித்தான் வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு வந்திருந்தால் கூட அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு தேசத்தில் எல்லா உரிமைகளும் உள்ளன என்பதே உண்மையாகும். இன்னொரு கோணத்தில் கூறுவதென்றால், பௌத்த மக்கள் விஜயனின் பரம்பரையினர் என்றால் விஜயனும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவனே! விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இயக்கர் மற்றும் நாகர் கோத்திரத்தினர் அதிகம் பேர் இருந்துள்ளனர். இந்த நாகர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இஸ்லாத்தைத் தழுவினர். எனவே, முஸ்லிம்களை ஒரு போதும் வந்தேறுகுடிகள் என்று குறிப்பிட்டு புறந்தள்ள முடியாது!
இலங்கை நாட்டில் முஸ்லிம்களைக் குறைவாகக் காட்டும் விதத்தில் ‘மரக்களயா’ என்றும் கூறப்படுவதுண்டு. இலங்கை முஸ்லிம்களை ‘மரக்கள மினிசு’ என்ற இந்தப் பெயர் கொண்டு அழைப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியே உள்ளது.
கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிங்க மன்னன் போர்த்துக்கேயருடனான போரில் தோல்வியடைந்து உயிர் காக்க தப்பி ஓடினான். அவன் ஊவா மாகாணத்தில் பங்கர கம்மன என்ற கிராமத்தில் ஒரு பெரிய மரப் பொந்தில் ஒளிந்து கொண்டான். இதை அங்கிருந்த ஒரு முஸ்லிம் பெண் கண்டுவிட்டாள். மன்னனைக் கொல்வதற்காக துரத்திக் கொண்டு வந்த போர்த்துக்கேய வீரர்கள் மன்னனைப் பற்றி அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அந்தப் பெண் மன்னனைக் காட்டிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேய வீரர்கள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டுச் சென்று விட்டனர். அவர்கள் சென்றதன் பின்னர் பொந்திலிருந்து வெளியே வந்த மன்னன் இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்தமே!) என்று கத்தினான். அந்தப் பெண்ணின் தியாகத்தைப் போற்ற அந்தக் கிராமத்தையே அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு தானமாகக் கொடுத்தான்.
இலங்கை வரலாற்றை ஆய்வு செய்தால் இலங்கை மன்னர்களின் மருத்துவர்களாக, நம்பகத்தன்மைக்குரிய சமையல்காரர்களாக, மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம்கள் இருந்திருப்பதை அறியலாம். மலைநாடு பற்றிய தகவல்களை அந்நிய சக்திகளுக்கு வழங்கியவர் ‘எகலபொல’ என்பவராவார். இவர் ஜோன் டொயிலியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ‘அரசனின் மாளிகையைச் சுற்றி வர இடையறாது காவல் காக்கும் சேனையில் இருக்கும் 400 பேரில் 300 பேர் முஸ்லிம்கள். ஏனைய 100 பேரும் சிங்களவர்களாவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(நுவர யக்கு: பக்கம் 186, நன்றி: நேர்வழி மாத இதழ்)
இந்த நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் நாட்டுத் தலைமையுடன் கொண்டிருந்த இறுக்கமான உறவையும் மன்னர்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உணரலாம். இலங்கைப் பாதுகாப்பு விடயத்திலும் முஸ்லிம்கள் பங்கு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. ஒட்டகப் படை (ஒட்டுப்பந்திய) என்ற போர் பிரிவு அன்றைய மன்னர்கள் காலத்தில் இருந்துள்ளது.

இரண்டாம் இராஜசிங்கன் காலப் பகுதியில் வெல்லவாய போரில் முஸ்லிம்கள் மன்னனுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். அவர்களது படை ‘ஒட்டுப்பந்திய’ – ஒட்டகப்படை என புகழ்ந்து பேசப்பட்டது. ஹங்குரன்கட்ட தேவாலயத்திற்கு மன்னன் அன்பளிப்புச் செய்த புடவையில் இவ்வொட்டகப்படை பொறிக்கப்பட்டு முஸ்லிம்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு இலங்கை அரசுக்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய நற்பிரஜை களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.
இலங்கையின் வர்த்தகம் ஒட்டுமொத்தமாக இலங்கை முஸ்லிம்களின் கைகளிலேயே தங்கியிருந்தது. கடலோரப் பகுதிகளை அந்நியர்கள் ஆண்ட போது கடல் பிரதேசத்திற்கும் கண்டி இராச்சியத்திற்குமான இணைப்புப் பாலமாக முஸ்லிம்களே இருந்துள்ளனர். கடந்த கால முஸ்லிம்கள் இலங்கை மக்கள் சமூகத்தில் புறக்கணிக்க முடியாத மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தார்கள்.
எனவே, சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தனர். நாமும் கல்வி, பொருளாதாரம், பண்பாடு, நேர்மை, போன்ற சகல அம்சங்களிலும் எம்மை வளர்த்துக் கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான உண்மைப் பிரஜைகளாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி