ஆசிரிய கல்வி கற்கைகளை துறைபோகக் கற்றவர்களையும் (Expert) அக் கல்வியை உயர்கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும், பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் கல்வியியலாளர் என உயர் அகராதிகள் கூறுகின்றன. இவ்வரையறையினுள் சேவையாற்றுவதையே கல்வியியளாளர் சேவை எனப்படும்.(Sri Lanka Teacher Educators Service)

ஆசிரிய கல்வியின் அத்திபாரமான மனிதன் பற்றிய விஞ்ஞான கல்வியில் (B.SC. in science) பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்று கல்விச் சேவையில் ஆசிரியராக தனது கடமையை எஸ்.என்.ஏ. அரூஸ் அவர்கள் ஆரம்பித்தார். பின்னர் ஆசிரியர் கல்வித் துறைகளில் உயர் பட்டங்களை (M.Sc.in sc. Ed), PGDE (Merit) பெற்றதன் விளைவாக இலங்கை ஆசிரிய கல்வியியளாளராக ஆசிரிய பயிலுனர்களைப் பயிற்றுவிக்க அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அதன் ஆரம்ப கால விரிவுரையாளர்களில் ஒருவராக கல்வியமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு விரிவுரையாளராக, முதுநிலை விரிவுரையாளராக, பீடத்தலைவராக, இணைப்பாளராக, உபபீடாதிபதியாக, பதில் பீடாதிபதியாக காலத்துக்குக் காலம் பல்வேறு பதவிகளை வகித்து அர்ப்பணிப்புமிக்க பொறுப்புமிக்க கடமை செய்து ஆசிரிய பயிலுனர்களிடையேயும், கல்விசார், கல்விசாரா ஊழியர்களிடையேயும் கால்நூற்றாண்டு காலமாக பெரும் மதிப்புமிக்கவராக திகழ்ந்து வருகிறார்.

சுமார் 35 வருடம் ஆசிரியர் கல்வியை துறைபோகக் கற்றும், கற்பித்தும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் CPD (London, Malaysia) பயிற்;சி பெற்றும் அவற்றை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விநிர்வாகிகள் ஆகியோருக்கு பயிற்றுவித்தும் ஆசிரிய கல்வி நிறுவனங்களை வினைத்திறனாக நிருவாகம் செய்த அறிவும் ஆற்றலும் பயிற்சியும் நிபுணத்துவமும் நிரம்பப் பெற்றவராக எஸ்.என்.ஏ. அரூஸ் மதிக்கப்படுகிறார். இதனால் இவர் ஓய்வு பெற்றாலும் இவரது பணியினை தொடர்ச்சியாக உள்வாங்கிக் கொள்ள பல உயர்கல்வி நிறுவனங்கள் போட்டியிட்டு ஆயத்தமாகி வருகின்றது என்ற செய்தியையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
1992 இல் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களின் பின் (1999) தொடக்கம் அங்கு கடமையாற்றிய காலம் வரை அதன் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் குறிப்பாக பயிலுனர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை முன்னேற்றுவதற்காக இரவு பகலாக அரும்பாடுபட்டவர்களில் ஒருவர். ஆசிரிய பயிலுனர்களின் கல்விச் செலவை பயிற்சிநெறிக் காலங்களில் மிக இழிவளவாக்கி அவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் எப்போதும் உறுதுனையாக நின்றவர்களில் ஒருவராவார். அது போல ஆசிரிய பயிலுனர்களின் மீதான அதீத கட்டுப்பாடுகளையும், நெருக்கடிகளையும் நிவர்த்திசெய்வதில் முன்னின்று உழைத்தவர். குறிப்பாக கல்விச்சுற்றுலா, களப் பயணங்கள், வெளிக்கள கற்பித்தல் பயிற்சி, பாடசாலையும் சமூகமும் விழிப்புணர்வு செயற்றிட்டம், விழாக்கள் என பயிலுனர்களின் பயிற்சிக் காலங்களில் இவற்றில் ஏற்படும் சிரமத்தையும், அழுத்தத்தையும் எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியே சிந்தித்து செயற்பட்ட குழுவில் முதன்மையானவர். குறிப்பாக பயிலுனர்களின் உணவுக்குழுவுக்கு தலைமை தாங்கி உணவு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி பயிலனர் மனதை வென்றவர். அத்தோடு பயிலுனர்களின் தனியாள் வேறுபாடுகளை சிறப்பாகவே அறிந்து அவர்களுக்கேற்ற உளவள, சமூக, மனவெழுச்சி ஆலோசனை சேவைகளையும் வழங்கியவர். தான் கற்ற ஆசிரிய கல்வி மூலம் பயிலுனர்களுக்கு நடத்தை மாற்றம் ஏற்படுத்துவது பற்றிய பிளேட்டோவின் இலட்சிய வாதம், ரூசோவின் இயற்கை வாதம், ஜோன் டூயி இன் செயற்பாட்டுவாதம், கார்ல்மாக்ஸின் சமதர்ம வாதம், கற்றல் கொள்கைகள், கற்பித்தல் முறைகள், நவீன உத்திகள், சமயங்கள் கூறும் நீதி, நியாயம், நேர்மை என்பவற்றை ஆசிரிய பயிலுனர்களோடு செயற்படுத்தி உயர்ந்த ஒழுக்க விழுமியங்களுள்ள ஆசிரியர்களாக உருவாக்குவதில் கவனம் செலுத்தி அவ்விதிகளை தானும் தனது நடை, உடை, பேச்சு, கற்பித்தல், நிருவாக பணிகளில் பின்பற்றி இன்று வரை முன்மாதிரியாக செயற்பட்டு வருபவராவார். இவரது ஆசிரிய கல்வி முன்மாதிரிகள் என்னிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
ஆசிரியம், ஆசிரிய கல்வியியலாளர் எனும் எண்ணக்கருக்கள் இன்று வரை நீண்டு நிலைத்திருப்பதற்கு இவரைப் போன்றோரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பெறுமதிமிக்கதாகும். இவ்வாறான ஒருவர் ஓய்வு பெறுதல் ஆசிரிய பயிலுனர் சமூகத்திற்கு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. “அறூஸ் சேர் கண்டிப்பானவர் அதேவேளை அன்பானவர்” என்ற வாசகம் ஆசிரிய கல்விச் சமூகத்தினரிடையே பிரபல்யம் பெற்றதாகும். பயிலுனர்களின், விரிவுரையாளர்களின் முன்னேற்றத்தில் அன்பும் பண்பும் பாசமும் நிறையப் பிரயோகித்தவர் என அவரது கல்விக்கடமை வரலாறு முழுவதும் பதிவாகியுள்ளதை நேர்முக ஆய்வு மூலம் சான்றுப்படுத்தினேன். அவர் வைத்திருக்கும் கண்டிப்பு விரிவுரை மண்டபங்களில் சில நிமிடங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் அவை ஆசிரிய பயிலுனர்களின் முன்னேற்றத்திற்கே அமைந்ததாக ஆசிரியர்கள் தனது விடுகை விழாவில் எடுத்துக்கூறுவதை நான் செவியுற்றுள்ளேன். இது போலவே கல்விசாரா ஊழியர்களுடனான அவரது வேலைப்பணி உறவும் வசீகர தலைமைத்துவமிக்கதொன்றாகும்.
இவை தவிர பல ஆயிரம் ஆசிரிய பயிலுனர்களை கல்வியியல் கற்கையில் வழிப்படுத்தி சிறந்த ஆசிரியராக, அதிபராக, கல்வி நிருவாகிகளாக, வலயக்கல்வி பணிப்பாளர்களாக இப்பிராந்தியத்தில் உருவாகுவதற்கு அடித்தளமாயிருந்தார். இதனால்தான் இலங்கையில் எப்பகுதிக்கு சென்ற போதிலும் நான் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் என அறிமுகம் செய்யும் போதெல்லாம் எஸ்.என்.ஏ. அரூஸ், ரீ. கணேசரெத்தினம் ஆகிய இருவரையும், ஏனைய விரிவுரையாளர்களையும் அசிரியர் சமூகம் சுகம் விசாரிப்பர். அவரின் கற்றல், கற்பித்தல் முன்மாதிரி பற்றியும் பேசுவர்.
ஆசிரிய முன்மாதிரிகள் இன்று நிலவுகிறதா? என்ற வினா உள்ள போதும் எஸ்.என்.ஏ. அரூஸ் போன்றவர்களின் முன்மாதிரி செயற்பாடுகளினால் இன்று வரை தொடர்ந்து வாழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதுபோலவே அவரது வீட்டு, சமூக வாழ்விலும் அவரது எளிமையான விரிவுரையாளர் நடத்தையை பிரயோகிப்பதையும் கண்ணுற்றுள்ளேன்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இருந்து மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு கல்வியமைச்சின் பதவி உயர்வின் நிமிர்த்தம் PGDEM (Merit)நிதி, நிருவாகத்திற்கான உப பீடாதிபதியாக நியமனம் பெற்றும், தேவை ஏற்படும் போது பதில் பீடாதிபதியாகவும் சிறப்பாக செயற்பட்டு சேவை செய்து வருகிறார் என்பதையும் எனது சக விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்களின் நேர் காணல் செய்தி மூலம் அறிய முடிகிறது.
தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு எஸ்.என்.ஏ. அரூஸ் அவர்களை பீடாதிபதி பதவிக்கு நியமிக்க விருப்பம் கொண்ட உயர் கல்விச் சமூகம் அவரை அத்தேசிய கல்வியியல் கல்லூரிக்கு பீடாதிபதியாக நியமிக்க அக்கறை கொண்டது. குறிப்பாக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் தவிசாளரும், தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விக்குழுவின் அங்கத்தவருமான பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், முன்னாள் தென்கிழக்குபல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், முன்னாள் இலங்கை முஸ்லிம் கல்வி மகா நாட்டின் தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் போன்றோர் என்னிடம் “இவரின் விருப்பத்தை பெற்றுத்தாருங்கள்” எனக்கோரிய போதெல்லாம் அரூஸ் அவர்களிடம் நான் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பதவியை பெற்று சேவையாற்றுங்கள் எனக்கூறிய போது “எனது பணி ஆசிரிய கல்வி கற்பித்தல் பணியே”என்று கூறி வந்தார். அப்பணியின் மூலம் தனது வீட்டு நிருவாகத்தில் ஏற்படும் சிரமம் பற்றியும் கூறி அதிலிருந்து விலகியிருந்தார்.
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாத்திரம் தனது அறிவுப்பகிர்வை மட்டுப்படுத்தாமல் தேசிய கல்வி நிறுவக அட்டாளைச்சேனை கல்விமானி பிராந்திய கிளையின் இணைப்பாளராகவும், திறந்த பல்கலைக்கழக பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி வளவாளராகவும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்சார் உளவளத்துணை கற்கைநெறியின் அதீதி விரிவுரையாளராகவும் (Guest lecture), ஆசிரிய கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள் ஆகியோரின் பயிற்சி வளவாளராகவும் இப்பிராந்திய ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் முதன்மை வளவாளராகவும், கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அரபுக்கல்லூரிகளின் பாடச்சீர்திருத்த குழு ஆலோசகராகவும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் சிரேஸ்ட பரீட்சகராகவும் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் - முஸ்லிம் உறவுகளை தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவர்களிடையே பேணி வளர்க்க அரும்பாடு பட்டவர் என்பதோடு தனது நடத்தையிலும் எவ்வித வேறுபாடுகளையும் காட்டாதவர். இதற்கு அவரது நண்பரும், மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதியுமான ரீ. கணேசரெத்தினத்தினத்துடனான இன்று வரையான நீண்ட கால உறவும் பணிப்பகிர்வும், வாழ்வியல் உறவுகளும் பெரும் சான்று.
இன்று இவருக்கு மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் சிறப்புமிக்க ஓய்வுப் பணி விழா சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இவரது ஆயுள் சிறக்கவும் கல்விப்பணி தொடரவும் எனது பிரார்த்தனைகள். இச்சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திய விழாக்குழுவினருக்கும் நன்றிகள்.

2024.07.04
AJL.VAZEEL [ M.Ed., M.Phil.]
Senior lecturer in professional Education
Ph.D Research scholar
Lecturer – National college of Education. Addalaichenai